பூங்காவனம் 20 ஆவது இதழ் மீதான பார்வை

பூங்காவனம் 20 ஆவது இதழ் மீதான பார்வை

மாவனல்லை – எம்.எம். மன்ஸுர்

பூங்காவனத்தின் 20 ஆவது இதழ் பன்முகப்படைப்பாளி திருமதி. தாமரைச் செல்வியின் அட்டைப் படத்தைத் தாங்கி வெளிவந்திருக்கிறது. பூங்காவனத்தின் உள்ளே வாசகர்களை ஒரு நிமிடம் தாமதிக்கச் செய்து அது கடந்து வந்த பாதையைச் சற்று மனதில் நிறுத்திப் பார்த்துவிட்டு மேலே தொடரச் சொல்வது போல ஆசிரியர் குழுவினது கருத்துக்கள் அமைந்துள்ளன.

மலைபோல குவிந்து கிடக்கும் பொருளாதார நெருக்கடியின் மத்தியிலும் அதன் வளர்ச்சிப் போக்கு தங்குதடையின்றி சென்றுகொண்டிருப்பதை ஒரு கணம் எண்ணிப் பார்க்கத் தூண்டுகிறது. கற்களும், முற்களும் நிரம்பிக் கிடந்த இலக்கிய வழி நெடுகிலும் அவற்றை எல்லாம் தாங்கிக் கொண்டு சொல்லம்புகளாலும், மற்றும் பல்வேறு வலிகளாலும் சிறுமைப்படுத்தப்பட்ட போதெல்லாம் முன்வைத்த காலை பின் வைக்காமல் முன்னேறிச் சென்று இன்று இருபதாவது இதழை வெளியிடும் அளவுக்கு துணிவு பெற்றிருக்கிறார்கள். அதற்கு வாசகர்களும், விளம்பரதாரர்களும்தான் காரணம் என்று இருபாலாரையும் பாராட்டியிருக்கிறது ஆசிரியர் குழு.

அட்டைப்பட அதிதி திருமதி. தாமரைச் செல்வி தனது நேர்காணலில் பல தகவல்களையும், கருத்துக்களையும் தந்திருக்கிறார். திருமதி. தாமரைச் செல்வி 1953 ஆம் ஆண்டு கிளிநொச்சி மாவட்டத்தில் பரந்தனில் உள்ள குமரபுரம் என்ற கிராமத்தில் பிறந்து, தனது ஆரம்பக் கல்வியை பரந்தன் இந்து மகா வித்தியாலயத்திலும், பின்னர் யாழ் இந்து மகளிர் கல்லூரியிலும் பெற்றுக்கொண்டுள்ளார். இவரது கணவர் திரு. வரணியூர் சி. கந்தசாமி அவர்களும் ஓர் எழுத்தாளர் என்பதை அறியும் போது மகிழ்ச்சியாக இருக்கிறது. அவரும் 70 களில் வீரகேசரியிலும், பல பத்திரிகைகளிலும் சிறுகதைகளை எழுதி வந்திருக்கிறார்.

திருமதி. தாமரைச் செல்வி அக்காலத்தில் வானொலி ஆக்கங்கள் எழுதியதன் மூலம் எழுத்தாளராக வேண்டும் என்ற முயற்சியை மேற்கொண்டதால் ஓர் எழுத்தாளராக உருவெடுத்திருக்கிறார். அப்போது வீரகேசரி நிருவாகியாக இருந்த கே.எஸ். பாலசந்திரனின் அறிமுகம் கிடைத்ததால் பெறப்பட்ட அறிவுரைகளுக்கு ஏற்ப எழுதத் தொடங்கியதால் பல நாவல்களையும், குறுநாவல்களையும், சிறுகதைகள், கவிதைகள் என பல்முகம் கொண்ட படைப்பாளியாக அவர் எழுத்துப் பணி செய்ய முடிந்தது என்பதை அறிய முடிகிறது.

வடபுலத்தில் நிலவிய யுத்தத்தினால் ஏற்பட்ட வலிகளை இன்னும் மறக்க முடியாத தாமரைச் செல்வி யுத்தத்துக்குப் பின்னரான வாழ்வு பற்றிய உண்மைகளை இன்றைய இலக்கியங்களில் காணமுடிகிறது என்பதையும் தனது கதைகளில் அவற்றைப் பிரதிபலிக்கச் செய்வதாகவும் கூறியிருக்கிறார். இவர் ஏனைய தனது இலக்கியப் பங்களிப்புகளோடு நாவல், சிறுகதை ஆகிய இரு துறைகளையுமே ஈடுபாடாக எடுத்துக் கொண்டுள்ளார். சி. சிவசேகரம், ஏ.ஜே. கணகரட்ணா, எஸ். ராஜசிங்கம், கே.எஸ். சிவகுமாரன் ஆகியோர் இவரது ஐந்து சிறுகதைகளை ஆங்கிலத்துக்கு மொழிபெயர்த்துள்ளார். மூன்று சிறுகதைகள் சிங்களத்திலும் மொழிபெயர்க்கப்பட்டுள்ளன. இத்தகைய மொழிபெயர்ப்புக்களின் ஊடாக தமது சமூகத்தின் வலிகளை வாசகர் மத்தியில் கொண்டு செல்ல முடிகிறது என்று குறிப்பிட்டுள்ளார்.

இவர் வரைந்த ஓவியங்கள் வீரகேசரி, தினகரன், ஈழநாடு, ஈழமுரசு போன்ற பத்திரிகைகளிலும், சுடர்ஒளி, குங்குமம் ஆகிய சஞ்சிகைகளலும் வெளிவந்திருக்கின்றன. குடும்பப் பொறுப்புகள் அதிகமாகக் காணப்படுவதனால் பெண் எழுத்தாளர்களின் பங்களிப்பு குறைவாக இருந்தாலும், ஆண் எழுத்தாளர்களின் படைப்புகளுடன் ஒப்பிடுகையில் தரமாக இருப்பதாக அவர் குறிப்பிடுகின்றார்.

1977 – 1998 ஆம் ஆண்டு முதல் சுமைகள் விண்ணில் அல்ல, விடிவெள்ளி, தாகம் போன்ற நாவல்களும் வேள்வித்தீ குறுநாவலும், ஒரு மழைக்கால இரவு சிறுகதைத் தொகுதியும் வெளியிட்டிருக்கிறார். அத்துடன் 2002 முதல் 2005 ஆம் ஆண்டு வரையிலான காலப்பகுதியில் அழுவதற்கு நேரமில்லை, வன்னியாச்சி சிறுகதைத் தொகுதிகளும், பச்சை வயல் கனவு நாவலும் வெளிவந்திருக்கின்றன. சொந்த நிறுவனமான சுப்ரம் பிரசுராலயம் மூலமாக இரு நூல்களும் வெளியிடப்பட்டு இருக்கின்றன. இப்படியான இலக்கியப் பங்களிப்புகளைச் செய்து வரும் திருமதி. தாமரைச் செல்வி இதுவரை இருநூற்றுக்கும் மேற்பட்ட சிறுகதைகளை எழுதியிருக்கிறார் என்பதை எண்ணும் போது அவரைப் பாராட்டாமல் இருக்க முடியாது. அதேபோன்று அவரது சிறுகதைகள், நாவல்கள் அநேகம் விருது பெற்றவைகளாகக் காணப்படுகின்றன.

மேலும் பூங்காவனத்தில் பள்ளிக்கூடம், நாளைய தூண்கள், மூட நம்பிக்கைகள், இதுதான் மாபிள் பீச், முத்துச் சரம், புன்னகை முலாம், அழைப்பு, புறப்படு ஆகிய கவிதைகள் காணப்படுகின்றன. இவற்றை பதுளை பாஹிரா, அலெக்ஸ் பரந்தாமன், பூவெலிகட எம்.எஸ்.எம். சப்ரி, கிண்ணியா ஜெனீரா ஹைருல் அமான், சூசை எட்வேட், தியத்தலாவ எச்.எப். ரிஸ்னா ஆகியோர் எழுதியுள்ளார். வழமை போன்று கவிஞர் ஏ. இக்பால் அவர்கள் இலக்கிய அனுபவ அலசலில் கவிதை பற்றிய சில முக்கியமான குறிப்புகளைத் தந்திருக்கிறார். அதிலும் பாடசாலைகளில் கல்வி கற்பிக்கும் தமிழாசிரியர்களுக்குப் பொருத்தமான அறிவுரைகளைத் தந்திருக்கிறார். அவற்றின் மூலம் சிறந்த கவிஞர்களையும், சிறந்த கவிதைகளையும் உருவாக்கலாம் என்பதற்குப் பல உதாரணங்கள் மூலம் தெளிவுபடுத்தியிருக்கிறார்.

இந்த இதழில் மூன்று சிறுகதைகள் வெளிவந்துள்ளன. இக்ராம் தாஹா எழுதியுள்ள 'திருப்பம்' என்ற சிறுகதை காதலித்து திருமணம் முடித்தாலும் காதலியை இறுதிவரையில் கண்கலங்காமல் காப்பாற்ற வேண்டும் என்பதனையும், என்னதான் மனக் கஷ்டங்கள் வந்தாலும் வந்தவளை வதை பண்ணக்கூடாது என்பதையும் சிறப்பாக சித்தரிக்கிறது.

'பெண் எனும் புயல்' என்ற சிறுகதையை எஸ்.ஆர். பாலசந்திரன் எழுதியுள்ளார். இது ஆழம் தெரியாமல் காலைவிடும் காளையர்களுக்கு நல்ல பாடம் புகட்டுகிறது. அதேபோன்று முயற்சி திருவினையானது என்ற சிறுகதை, முயற்சியுள்ளோருக்கு இறைவன் அருள்புரிகிறான் என்பதனையும் அந்த முயற்சிக்கு ஆதரவளிக்க முன்வருபவர்களுக்கு தாராள மனமும் இருக்க வேண்டும் என்பதையும் எடுத்துக் காட்டுகிறது.

பேராதனை கா. தவபாலன் 1995 ஆம் ஆண்டு நாட்டில் நிலவிய உள்நாட்டு கலவரத்தில் யாழ் குடாநாட்டைவிட்டு வெளியேறிய அனுபவத்தை வாசகர்களுடன் பகிர்ந்துகொள்கிறார். சங்கத்தமிழ் இலக்கியமும், அதன் வருங்காலமும் எனும் தலைப்பில் லண்டன் நுணாவிலூர் கா. விசயரத்தினம் எழுதியுள்ள கட்டுரையில் முச்சங்க காலத்து இலக்கிய வகைகளைப் பற்றியும், அவை எவ்வெந்தக் காலங்களுக்கு உரியவை என்பதைப் பற்றியும் குறிப்புகளுடன் அவற்றின் அட்டவனையையும் தந்திருக்கிறார். புலம்பெயர்ந்தவர்களின் மூலமாக இலக்கியம் படைக்கப்படுகின்ற பொழுது எதிர்காலத்தில் தமிழ் இனிச்சாகாது என்ற உண்மையையும் அழகாக எடுத்துக் காட்டியிருக்கிறார்.

திறந்த கதவுள் தெரிந்தவை ஒரு பார்வை என்ற தலைப்பில் லெனின் மதிவானம் அவர்கள் இலக்கியப் படைப்பாளி தியத்தலாவ எச்.எப். ரிஸ்னாவின் நூலை மதிப்பீடு செய்துள்ளார். மேலும் இதழில் பூங்காவனம் பற்றிய கருத்துக்களும், 16 நூல்களுக்கான அறிமுகக் குறிப்புகளும் காணப்படுகின்றன. ஏ.சி. ஜரீனா முஸ்தபா எழுதிய அவளுக்குத் தெரியாத ரகசியம் என்ற நாவல் வெளியீட்டின் போது பிடிக்கப்பட்ட புகைப்படங்களும இடம்பெற்று பூங்காவனம் மேலும் அழகுரக் காணப்படுகிறது!!!

சஞ்சிகை - பூங்காவனம்
பிரதம ஆசிரியர் - வெலிகம ரிம்ஸா முஹம்மத்
தொலைபேசி இலக்கம் - 0775009222
வெளியீடு - பூங்காவனம் இலக்கிய வட்டம்
விலை - 100 ரூபாய்

Comments

Popular posts from this blog

பூங்காவனம் 33 ஆவது இதழ் மீதான பார்வை

பூங்காவனம் 30 ஆவது இதழ் மீதான பார்வை

பூங்காவனம் 37 ஆவது இதழ் மீதான பார்வை