பூங்காவனம் 34 ஆவது இதழ் மீதான பார்வை
பூங்காவனம் 34 ஆவது இதழ் பற்றிய கண்ணோட்டம்
கலாபூஷணம் எம்.எம். மன்ஸூர் - மாவனல்லை.
பூங்காவனத்தின் 34 ஆவது இதழ் இம்முறை வானொலி நாடகத்துறை எழுத்தாளரும், உளவளத்துறை ஆலோசகரும், எழுத்தாளருமான திருமதி. மரீனா இல்யாஸ் ஷாபியின் முன் அட்டைப் படத்தைத் தாங்கி வெளிவந்திருக்கிறது.
மலரின் மணங்கமழும் பூங்காவனத்தின் இதழின் உள்ளே வழமையான நேர்காணல், கவிதைகள், சிறுகதைகள், கட்டுரை என்ற அம்சங்களோடு நூல் மதிப்பீடு, வாசகர் கடிதம், நூலகப் பூங்கா ஆகிய பல்வேறு அம்சங்களுடன் பூத்துக் குலுங்குகின்றன.
கலை இலக்கியச் சஞ்சிகையான பூங்காவனத்தின் ஆசிரியர், சர்வதேச மொழிபெயர்ப்புத் தினமான செப்டெம்பர் 30 ஆம் திகதியினை நினைவுபடுத்தி மொழிபெயர்ப்பு நூல்களின் முக்கியத்துவத்தைப் பற்றியும் மொழிபெயர்ப்பு நூல்களை வாசிக்க வேண்டியதன் அவசியத்தைப் பற்றியும் வலியுறுத்தியிருக்கிறார். இலங்கை பல்லின மக்கள் வாழும் நாடாக, பல மொழிகளைப் பேசுகின்றவர்களாக இருக்கின்றமையால் அந்த அந்த இனத்தவர்களின் பண்பாடு, கலை கலாசாரம் என்பவற்றை அறிந்து கொள்வதற்கு அந்த அந்தச் சமூகத்தைச் சேர்ந்தவர்களது மொழிகளை எல்லோராலும் கற்கவோ, பேசவோ முடியாமல் இருக்கின்ற காரணத்தினால் மொழிபெயர்ப்பு நூல்களின் மூலமாக அவற்றைக் தெரிந்துகொள்ள முடியுமானதால் மொழிபெயர்ப்பு நூல்களின் முக்கியத்துவம் எத்தகையது என்பதை வாசகர்களுக்கு முன்வைத்திருக்கிறார்.
கவிதைகளை சந்திரன் விவேகரன், எஸ்.ஏ. இஸ்மத் பாத்திமா, கலாபூஷணம் பீ.ரீ. அஸீஸ், எஸ். நளாயினி, ஹஸீபா அன்வர், மருதூர் ஜமால்தீன், ஆ. முல்லைதிவ்யன், எம்.எஸ்.எம். சப்ரி, ஆர்.ஜே. பிரகலாதன், அப்துல் ஹலீம், யாழ் ஜாபிர் பரீட் என்பவர்கள் பல தலைப்புகளில் 11 கவிதைகளைத் தந்திருக்கிறார்கள். அதேபோன்று பாவத்தின் பரிசு, சத்திய தேவதையின் சாந்தி வேதம், மன்னித்தாலே வாழலாம் என்ற தலைப்புக்களில் முறையே எஸ்.ஆர். பாலசந்திரன், ஆனந்தி, சூசை எட்வேட் ஆகியோர் எழுதிய மூன்று சிறுகதைகள் சஞ்சிகையில் இடம்பெற்றுள்ளன.
இளம் படைப்பாளி ஷஷஎச்.எப். ரிஸ்னாவின் மெல்லிதமாய்ப் பேசும் கவிநூறு கவிதைகள்|| என்ற தலைப்பில் பிரபல இலக்கிய விமர்சகரும் எழுத்தாளருமான கே.எஸ். சிவகுமாரன் அவர்கள் ரிஸ்னா வெளியிட்டுள்ள ஷஷமழையில் நனையும் மனசு|| என்ற கவிதை நூலைப் பற்றிய அழகியதொரு விமர்சனத்தைத் தந்துள்ளார். ரிஸ்னாவின் மேற்படி கவிதை நூலில் 78 கவிதைகள் இடம்பிடித்துள்ளன. இந்நூல் மலைக் குளிரில் தளிர் பறிக்கும் மலையக மாதருக்கு சமர்ப்பணம் செய்யப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
அத்தோடு ஷஷஇலங்கைப் புலமைச் சொத்துச் சட்டத்தின் நிழலில் இலக்கியப் படைப்புக்கள் மீதான ஆக்கவுரிமை மற்றும் பதிப்புரிமை|| என்ற தலைப்பில் வீ. கமால் அஹமட் எழுதியிருக்கும் கட்டுரையானது மிகவும் பிரயோசனமுள்ள சகல எழுத்தாளர்களும் பதிப்பாளர்களும் அறிந்திருக்க வேண்டிய தகவல்களைக் கொண்டதாக உள்ளது. சமகால எழுத்துலகில் எழுத்தாளர்கள் கடைப்பிடிக்க வேண்டிய சட்டப் பாதுகாப்புகள் பற்றிய ஏற்பாடுகள் புலமைச் சொத்துச் சட்டத்தில் உள்ளடங்கியிருப்பதனால் அவற்றை எழுத்தாளர்கள் படிப்பது பயனுள்ளதாகும். மேலும் படைப்பாளிக்கு உரித்தான உரிமைகள், ஆக்கமொன்றின் நியாயமான பயன்பாடு, உரிமை மீறலும் பிணக்குகளுக்கான தீர்வும் பற்றிய சட்டத்தில் உள்ள ஏற்பாடுகள் பற்றிய விளக்கங்கள் கட்டுரையில் தரப்பட்டுள்ளன.
மேலும் வெலிகம ரிம்ஸா முஹம்மதின் 13 ஆவது வெளியீடான ஷஷவிடியல்|| ஆய்வு நூல் பற்றிய கண்ணோட்டத்தினை பதுளை பாஹிரா முன்வைத்திருக்கிறார். "பிட்டும் தேங்காய்ப் பூவும், இழந்துவிட்ட இன்பங்கள், ஒரு காலம் இருந்தது" ஆகிய மூன்று கவிதைத் தொகுதிகளிலும் இருந்து கவிதைகளுக்கு செய்திருக்கும் விமர்சனத்தைப் பற்றிய கருத்துக்களையும் அதன் பாங்கினைப் பற்றிய தனது எண்ணத்தையும் பதிவு செய்திருக்கிறார் பதுளை பாஹிரா. நூலாசிரியரின் விமர்சன சிறப்பையும் அவர் பாராட்டியிருக்கிறார்.
கிழக்கிலங்கைத் தமிழ் பேசும் மக்களின் நாட்டார் வழக்காறுகள் பழமொழிகள் பற்றிய கட்டுரையை எஸ். முத்துமீரான் வாசகர்களுக்காக முன்வைத்திருக்கிறார். இக்கட்டுரையில் நாட்டுப்புற ஆய்வாரளர்களும் பழமொழிகளும், பழமொழிகள் உணர்த்தும் பண்பாட்டுக் கூறுகள், சான்றுக்குச் சில பல மொழிகள், பழ மொழிகளில் தமிழ் மரபுக் கூறுகள், பழ மொழிகளில் மண் வளச் சொற்கள் என உப தலைப்புக்கள் இட்டு சிறந்ததொரு கட்டுரையை வாசகர்களுக்குத் தந்திருக்கிறார்.
இதுதவிர பூங்காவனம் பற்றிய வாசகர்களது கருத்துக்கள், நூலகப் பூங்கா என்பனவும் இதழில் இடம்பிடித்துள்ளன. இந்த இதழில் நூலகப் பூங்காவில் ஐந்து நூல்கள் பற்றிய சுருக்கக் குறிப்புகள் காணப்படுகின்றன. மொத்தத்தில் சகல அம்சங்களும் பொருந்தியதாக இந்த இதழ் அமைந்திருப்பது பூங்காவனத்தின் வாசகர்களுக்கு மகிழ்ச்சி தரும் செய்தியாகும். பூங்காவனம் மென்மேலும் சிறப்புற வாழ்த்துகிறேன்!!!
சஞ்சிகை - பூங்காவனம்
பிரதம ஆசிரியர் - ரிம்ஸா முஹம்மத்
வெளியீடு - பூங்காவனம் இலக்கிய வட்டம்
தொலைபேசி - 0775009222
விலை - 100 ரூபாய்
கலாபூஷணம் எம்.எம். மன்ஸூர் - மாவனல்லை

Comments
Post a Comment