பூங்காவனம் 36 ஆவது இதழ் மீதான பார்வை
பூங்காவனம் 36 ஆவது இதழ் மீதான பார்வை
கலாபூஷணம் எம்.எம். மன்ஸுர்
கலை இலக்கிய சமூக சஞ்சிகையான பூங்காவனத்தின் 36 ஆவது இதழ் எழுத்தாளர் திருமதி. சுமைரா அன்வர் அவர்களின் அட்டைப் படத்;தைத் தாங்கி வெளிவந்துள்ளது. பூங்காவனம் இலக்கிய வட்டத்தினால் வெளியிடப்படும் இச்சஞ்சிகையின் உள்ளே இலக்கியச் சுவை நிரம்பிய ஆக்கங்கங்கள் இடம்பெற்று சஞ்சிகையை அலங்கரிக்கின்றன.
சஞ்சிகையின் நேர்காணலை பிரதம ஆசிரியர் ரிம்ஸா முஹம்மத் மேற்கொண்டு பிரபல எழுத்தாளர் திருமதி. சுமைரா அன்வரிடமிருந்து பல இலக்கியத் தகவல்களையும் அவர் பற்றிய குறிப்புக்களையும் தந்துள்ளார்.
இதழில் எட்டு கவிதைகள் இடம்பெற்றுள்ளன. இவற்றை முறையே இர்சாத் இமாமுத்தீன், பதுளை பாஹிரா, எம்.எஸ்.எம். சப்ரி, சஸ்னா பானு நவாஸ், ஆர்.பி. யசோதரை, எஸ்.ஏ. இஸ்மத் பாத்திமா, ஆ. முல்லைதிவ்யன், எஸ். நளாயினி ஆகியோர் படைத்துள்ளனர். எஸ்.ஆர். பாலசந்திரன், சூசை எட்வேட், கலாபூஷணம் பீ.ரீ. அஸீஸ் ஆகியோர் முறையே சபலம், பெருமைக்காக, மகிழ்ச்சிப் பூக்கள் ஆகிய தலைப்புக்களில் மூன்று சிறுகதைகளை எழுதியுள்ளனர். அதேபோன்று ஜெனீரா ஹைருல் அமான் அவர்களின் குறுங்கதை ஒன்றும், பேராசிரியர் சபா ஜெயராசா அவர்களின் கவிதையின் மறுபக்கம் என்ற தலைப்பிலான கட்டுரை ஒன்றும் இதழில் இடம்பிடித்துள்ளதோடு மூன்று நூல்களைப் பற்றிய மதிப்பீடுகளையும் இதழில் காணலாம். இவற்றை முறையே குறிஞ்சி நிலா, மூதூர் முகைதீன், எச்.எப். ரிஸ்னா ஆகியோர் தந்துள்ளனர்.
வழமைபோன்று சஞ்சிகையின் ஆசிரியர் தலையங்கம் எங்களை ஒரு நிமிடம் நிற்கச் சொல்லி அந்தப் பக்கத்தில் பலனுள்ள ஒரு விடயத்தைப் பற்றிய கருத்துக்களைத் தருவது வழக்கம். இம்முறை இளந்தலைமுறையினர் கையடக்கத் தொலைபேசியை பாவனை செய்யும் முறை பற்றியும், அனேகமானோர் பிழையான திசைகளில் தமது காலத்தைச் செலவிடுவது பற்றியும் அதிலிருந்து விடுபட மார்க்கத்தின்பால் தம்மை ஈடுபடுத்திக்கொள்ள வேண்டும், அப்பொழுது நல்லொழுக்கமுள்ள விழுமியங்களைக் கொண்ட சமுதாயமாக மாறும் என்ற கருத்தையும் சுட்டிக் காட்டியுள்ளார் ஆசிரியர்.
அட்டைப் படத்தை அலங்கரிக்கும் திருமதி. சுமைரா அன்வர் குருநாகல் மாவட்டத்திலுள்ள மல்லவப்பிட்டியைப் பிறப்பிடமாகக் கொண்டவர். ஆசிரியர் குடும்பத்தில் மூத்தவரான இவரும் ஒரு ஆசிரியர்தான். பாடசாலை மட்டத்திலும், மாகாண மட்டத்திலும், தேசிய ரீதியிலுமாக இலக்கியப் போட்டிகளில் பல மட்டப் பரிசுகளைப் பெற்றுள்ளதோடு, சுமார் 33 வருடங்களாக இலக்கியத் துறையில் ஈடுபாடு காட்டி வருகிறார். பல்கலைக்கழகப் பட்டதாரியான இவர், இதுவரை எண்ணச் சிதறல்கள் என்ற கவிதைத் தொகுதியையும், விடியலில் ஓர் அஸ்தமனம், வசந்தங்கள் வாழ்த்துச் சொல்லும் என்ற பெயர்களில் இரண்டு நாவல்களுமாக மூன்று நூல்களை இலக்கிய உலகுக்குத் தந்துள்ளார்.
நூல் மதிப்பீட்டில் கலாபூஷணம் திருமதி. நூருல் அயின் நஜ்முல் ஹுசைன் அவர்களது மின்னும் தாரகைகள் என்ற நூலைப் பற்றிய மதிப்பீட்டினை குறிஞ்சி நிலா மேற்கொண்டிருக்கிறார். இந்நூல் 460 பக்கங்களில் இலங்கையில் உள்ள பெண் எழுத்தாளர்கள், கல்வியாளர்கள், வானொலி தொலைக்காட்சியைச் சேர்ந்த ஊடகவியலாளர்கள், பத்திரிகையாளர்கள் போன்றவர்களும் இணைத்துக்கொள்ளப்பட்டு அவர்கள் பற்றிய தகவல் திரட்டாகத் தரப்பட்டிருக்கின்ற ஒரு ஆய்வு நூலாகும்.
அதேபோன்று கவிஞர் மூதூர் முகைதீன் கடல் முற்றம் என்ற கவிதை நூலைப் பற்றிய மதிப்பீட்டினை முன்வைத்திருக்கிறார். இந்த நூலின் ஆசிரியரான கவிதாயினி கிண்ணியா எஸ். பாயிஸா அலி அவர்கள் தனது ஐம்பது கவிதைகளைத் தொகுத்து கடல் முற்றம் என்ற இந்த நூலை வெளியிட்டிருக்கிறார். சஞ்சிகையில் கடல் முற்றம் நூல் பற்றிய சிறந்ததொரு மதிப்பீட்டினை வாசிக்க முடிகிறது.
மேலும் வைத்திய கலாநிதி அஸாத் எம். ஹனிபாவின் தம்பியார் என்ற கவிதை நூலைப் பற்றிய மதிப்பீட்டினை இளந்தலைமுறைப் படைப்பாளியும் கவிதாயினியுமான தியத்தலாவை எச்.எப். ரிஸ்னா மிகச் சிறந்த முறையில் உதாரணக் கவிதைகளுடன் உள் நுழைந்து சிறந்ததொரு நூல் மதிப்பினைச் செய்திருக்கிறார். குறிப்பாக இக்கவிதை நூல் கலவரங்களில் உயிர்நீத்த அனைத்து இன மக்களுக்குமாகச் சமர்ப்பணம் செய்யப்பட்டிருக்கின்றது. சிறுபான்மை என்றால் சீரழிக்கப்பட வேண்டியவர்கள், அவர்களைப் படுகுழியில் தள்ளி மண்ணால் மூடிவிட வேண்டும் என்று கருதுகின்ற இனவெறியர்களுக்கு ஊசி போடுவதாக அஸாத் எம். ஹனிபாவின் கவிதைகள் அமைந்திருப்பது சிறப்பானதாகும்.
மேலும் நாம் எல்லோரும் கவிதைகள் பலவற்றை எழுதுகின்றோம்தான். நாளாந்தம் நூற்றுக் கணக்கான கவிதைகள் படைக்கப்படுகின்றன. தினம் தினம் கவிதை நூல்கள் வெளியிடப்பட்டுக்கொண்டும் இருக்கின்றன. என்றாலும் எல்லாம் கவிதைப் பண்புகளைக் கொண்டிருக்கின்றனவா? என்ற ஒரு கேள்விக்குப் பதிலாக இருக்குமா என்பதை ஒவ்வொருவரும் கேட்டுக்கொள்ள வேண்டிவர்களாய் இருக்கிறோம். எனவே கவிதைக்கும் மறுபக்கம் என்று ஒன்று உள்ளது என்பதனை பேராசிரியர் சபா ஜெயராசா அவர்கள் கவிதையின் மறுபக்கம் என்ற கட்டுரையின் மூலம் விளக்கியிருக்கிறார்.
ஏமாற்று உலகில் ஏமாற்றுபவர்கள் இருக்கும் வரை ஏமாறுபவர்களும் இருந்துகொண்டுதான் இருப்பார்கள் என்ற கசப்பான உண்மையை கிண்ணியா ஜெனீரா ஹைருல் அமான் தனது ஏமாறுகிறவர்கள் இருக்கும் வரை என்ற குறுங்கதை மூலம் விளக்கியுள்ளார்.
இன்னும் நூலகப் பூங்காப் பக்கம் பார்வையைச் செலுத்தும் போது ஒன்பது நூல்களைப் பற்றிய குறிப்புக்கள் தரப்பட்டுள்ளன. இதில் நான்கு கவிதை நூல்களும் இரண்டு கட்டுரைத் தொகுதிகளும் இரண்டு ஆய்வு நூல்களும் ஒரு நாவலுமாக என்று 09 நூல்கள் பற்றிய விபரங்கள் இருப்பதை அவதானிக்க முடிகிறது.
இவற்றினூடே பூங்காவனம் சஞ்சிகையின் பிரதம ஆசிரியர் வெலிகம ரிம்ஸா முஹம்மத் எழுதி வெளியிட்ட விடியல் ஆய்வு நூல் வெளியீட்டு விழாவில் எடுக்கப்பட்ட புகைப்படங்களும் பூங்காவனத்தை அலங்கரிக்கின்றன. மொத்தத்தில் நிறைவான பல இலக்கிய அம்சங்களுடன் பூங்காவனம் வெளிவந்திருப்பது அதன் வெளியீட்டுக்குப் பெருமை சேர்க்கின்றது!!!
சஞ்சிகை - பூங்காவனம்
பிரதம ஆசிரியர் - ரிம்ஸா முஹம்மத்
வெளியீடு - பூங்காவனம் இலக்கிய வட்டம்
தொலைபேசி - 0775009222
விலை - 100 ரூபாய்
Comments
Post a Comment